Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
அக்டோபர் 2008
சாமி
பெ.பகவத்கீதா

அம்மன்கோவில் திருவிழா - ஊரே களைகட்டி இருந்தது. கோவில் இருந்த தெருவில் விதம் விதமான கடைகள் புதிதாகத் தோன்றி இருந்தன. அக்கம்பக்கத்து ஊர்களிலிருந்தும் மக்கள் வந்து திரண்டிருந்தனர். கோவில் முன்பாக பெருங்கூட்டம். ஆடு ஒன்று மாலையோடு நிற்க ‘சதக்' என்ற கத்தியின் பாய்ச்சலில் அதன் கழுத்திலிருந்து இரத்தம் பீறிட்டது. அதை ஒரு கண்ணாடிக் கிண்ணத்தில் பிடித்து ‘குட்டி குடிப்பவர்' குடிக்க ஆரம்பித்தார். அதைப் பார்த்த வந்தனா, பத்து வயதுச்சிறுமி, தலைசுற்றி கண்கள் செருக மயங்கி விழுந்தாள். அவளது தங்கை வசந்தியோ குறுகுறுத்த விழிகளோடு குட்டி குடிப்பவரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவசர அவசரமாகப் பக்கத்திலிருந்த கடையில் தண்ணீர் பாட்டிலை வாங்கி, நீரை முகத்தில் தெளித்தேன். வந்தனா கண்விழித்து, “அப்பா...'' என்று பயத்துடன் கத்தியபடி கட்டிக் கொண்டாள்.

“வசந்தி... வா. வீட்டுக்குப் போகலாம். உங்கக்கா ரொம்ப பயப்படறா...''

“போ... அப்பா. இன்னும் கொஞ்சநேரம் இருந்துட்டுப் போகலாம்...''

“ஏய்... வரமாட்டே... அங்கே பாரு பஞ்சுமிட்டாய் உனக்குப் பிடிக்குமில்லே... வா... வாங்கித் தர்றேன்''

“நாலு பஞ்சு மிட்டாய் வாங்கித் தரணும்''

“ச... வா...''

அவள் கேட்டபடி வாங்கிக்கொடுத்து வீடுநோக்கி நடந்தோம். மூத்தவளின் முகத்தில் கலக்கம் இன்னும் விலகியபாடில்லை. ஆடு வெட்டும் காட்சியைக் கண்டும் பயப்படாத சின்னவளின் மனநிலை அசட்டுத் துணிச்சலாக இருக்குமோ? தொலைக்காட்சியின் பயங்கர வன்முறைகளின் முன்பாக இதை மிகவும் சாதாரண நிகழ்வாக எடுத்துக்கொள்ள குழந்தைமனம் பழகி விட்டதா... எனக்கும் மனம் குழம்பியது. மனிதர்களைக் கொல்லும் மனித மிருகங்களுக்கு முன் மிருகங்களைக் கொல்லும் மனிதனே தேவலாம் என்று தோன்றியது. வீட்டை அடைந்ததும் சிறிது நிம்மதி ஏற்பட்டது.

வீட்டிற்குள் நுழைந்ததுமே “பாட்டி...'' என்று ஓடிய வசந்தி எனது அம்மாவிடம் கோவில் காட்சிகளை விவக்கத் தொடங்கினாள். “பாட்டி... கோவில்லே சாமி சிலைக்கு முன்னாலே ஒரு ஆட்டை மாலைபோட்டு நிறுத்தி இருந்தாங்களா... அந்த ஆட்டைக் கழுத்திலே வெட்டி கொட்டுன இரத்தத்தை ஒரு தாத்தா கிண்ணத்துலே பிடிச்சுக் குடிச்சாரு... எப்படித்தான் அந்தத் தாத்தாவுக்கு உமட்டாமே இருந்ததுன்னு தெரியலே. அந்த ஆடு பாவம்தானே பாட்டி... ஏன் இப்படிச் செய்யறாங்க...''

“இல்லம்மா... அது சாமிக்கு வேண்டுதலா இருக்கும். நாம் பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்கிறமாதி அவங்க ஆடு கொடுக்கறதா வேண்டிகிட்டிருப்பாங்க. அந்த ஆட்டு இரத்தத்தைக் குடிக்கும்போது அவரு தாத்தா இல்லே... சாமி ஆயிடுவாரு. சாமியே வந்து தான் குடிக்குதுன்னு சொல்லுவாங்க...''

“போ... பாட்டி. நீ பொய் சொல்றே... சாமி எப்படி வரும்...? நாமதான் சாமியைக் கண்ணாலே பார்க்கவே முடியாதே...'' அம்மாவைக் காப்பாற்றுவதற்காக நான் குரல் கொடுத்தேன். “வசந்தி... இங்க வந்து பாரு... கார்ட்டூன் சேனல்லே டாமும்.. செரியும்... சீக்கிரமா ஓடிவா...'' என்றழைக்க வசந்தி ஓடோடி வந்தாள்.

இரவு உணவு உண்ணும்பொழுது சின்னவள் மீண்டும் ஆரம்பித்தாள். “பாட்டி... சாமியைப் பத்தி நீ எத்தனையோ கதை சொல்லி இருக்கே. நமக்கெல்லாம் கஷ்டம் வந்தா காப்பாத்தறவரு சாமிதான்னு சொன்னே இல்லே...''

“ஆமா சொன்னேன்''

“காக்கா, குருவி, ஆடு, மாடு, நாய், பூனை எல்லாமே நம்பளை மாதி ஜீவனுள்ளது. அதுக்கெல்லாம் கெடுதல் பண்ணக் கூடாதுன்னு சொன்னேதானே?''

“ஆமா...''

“பசுவைக் கூட கோமாதா... அது தெய்வம்னு சொன்னே. ஆனா கோவில்லே ஆட்டை வெட்டறாங்க. இரத்தத்தைக் குடிக்கிறாங்க. சாமி வந்து எனக்கு ஆட்டு இரத்தம் வேணும்னு இவங்களைக் கேட்டுச்சா என்ன... சாமிதான் பேசவே பேசாதே...''

இதற்கு என்ன பதிலைச் சொல்வது என்று தெரியாமல் அம்மா சங்கடத்துடன் நெளிய நான் வசந்தியை அடக்கினேன். “வசந்தி... பேசாமே சாப்பிட மாட்டே... அந்த ஆட்டைப் பத்தியே பேசிக்கிட்டிருக்காதே... உங்கக்கா முகத்தைப் பாரு... மறுபடியும் அவ மயங்கி விழப் போறா... இதையெல்லாம் அப்புறமா பாட்டிகிட்டே கேளு... நீ சமர்த்துக் குட்டி தானே?''

அவளும் அமைதியாக சாப்பிட ஆரம்பித்தாள். எனது அமைதிதான் பறிபோனது போல ஓருணர்வு தோன்றியது. அடுத்த நாள். ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிறியவளை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்றேன். வந்தனா வரவில்லை என்றுகூறி வீட்டிலேயே இருந்தாள்.

அமைதியான இடம். விசாலமான கோவில். தீபாராதனை காட்டி, திருநீறு தர, வாங்கி நெற்றியிலிட்டுக் கொண்டு அம்பாளையும் தசித்துவிட்டு வந்தமர்ந்தோம். அங்கு கோவில் குருக்களிடம் ஒருவர் தன் பிரச்சனையைக் கூறி அழுதுகொண்டிருந்தார். “ஒண்ணும் கவலைப்படாதீங்கோ... தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சுன்னு நினைச்சுக்குங்கோ. உங்களுக்குச் சின்னக் கஷ்டத்தைக் கொடுத்துப் பெரிய கஷ்டத்துலேருந்து பகவான் உங்களைக் காப்பாத்தி இருக்கார். பகவான் கருணையே வடிவானவர். அவரு கஷ்டத்தைக் கொடுப்பாரா... 48 நாள் விடாமே அம்பாளுக்கு நெய்விளக்கு ஏத்தி வையுங்கோ. உங்க கஷ்டமெல்லாம் பஞ்சாப் பறந்து போகும்.'' கஷ்டத்துக்கான பகாரத்தை கோவில் குருக்கள் விளக்கமாக எடுத்துரைத்தார்.

அதைக் கேட்டுக் கொண்டிருந்த வசந்தி, “அப்பா... கருணையே வடிவானவர்னா... என்ன அர்த்தம்...''

இவளுக்கு என்ன சொல்லிப் புரிய வைப்பது. சற்று யோசித்துப் பின் சொன்னேன். “அதுவா... ஒருமுறை நீ கீழே விழுந்து கால்லே அடிபட்டு இரத்தம் சொட்ட அழுதபோது உங்கம்மா என்ன பண்ணினாங்க...''

“என்ன பண்ணினாங்க...'' திருப்பிக் கேட்டாள்.

“மடியிலே உக்கார வெச்சு, உன்னைக் கொஞ்சி கண்ணைத் துடைச்சு, உன் காயத்துக்கு மருந்து போட்டு, உன்னைச் சிக்க வெச்சாங்க இல்லே...''

“ஆமா...''

“அதுமாதி மனுசங்க எப்பக் கஷ்டப்பட்டாலும் சாமி அவங்களுக்குக் கருணையோட நல்லது செய்வாரு''

“அம்மா மாதியா...'' என்று கேட்டவளின் கவனம் அங்கு கோவில் யானை வர அதன்மேல் சென்றது. சிறிதுநேரம் யானையை வேடிக்கை பார்த்திருந்துவிட்டு வீடு திரும்பினோம்.

மதிய நேரம்.. தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் வாசிக்க ஆரம்பித்தார். எதிர்பாராத-பரபரப்பான செய்தி வந்து விழுந்தது ‘கோவிலில் வெடிகுண்டு வெடித்துப் பலர் மாண்டனராம்' அனைவருமே பிரமை பிடித்தாற் போல அமர்ந்திருந்தோம்.

கோவிலின் உட்புறச் சுவர்களில் மனித இரத்தமும் சிதறிய தசைத் துண்டுகளுமாய்... காட்சிகள் விரிந்து கொண்டிருந்தது சின்னத்திரையில்.
அதிர்ச்சியிலிருந்தும் மீளவே முடியாத இறுக்கம். நிமிடங்கள் கரைய, சின்னவள் இறுக்கத்தைக் கலைத்தாள்.

“ஆட்டுச்சாமி ஆட்டு இரத்தத்தைக் குடிச்சமாதி கோவில்சாமி மனுஷ இரத்தத்தைக் குடிச்சிட்டாராப்பா... சாமி கருணை வடிவானவர், கஷ்டத்தைப் போக்கறவர்னு நீ சொன்னே. ஆனா இத்தனை பேருக்கும் சாமியே எவ்வளவு பெரிய கஷ்டத்தைக் கொடுத்திட்டாரு. வேண்டாப்பா... எனக்கு இந்தச் சாமியே வேணாம்...'' என்று கூறி வேகமாக எழுந்து வெளியில் சென்றாள்.

சின்னத்திரை காட்சிகளால் அதிர்ச்சியில் உறைந்திருந்த எங்களுக்கு இந்தச் சிறு பெண்ணின் பேச்சு உயில் அறைந்தாற் போன்ற விழிப்பினை ஏற்படுத்தியது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com